கோவை : ஆன்லைனில் கார் விற்பதாக கூறி, கோவையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை சேர்ந்த 35 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், கார் வாங்குவதற்காக ஓ.எல்.எக்ஸ். இணையதளத்தில் சமீபத்தில் தேடியுள்ளார். அப்போது, சொகுசு கார் ஒன்று விற்பனைக்கு இருப்பதை பார்த்த அவர், அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு காரின் விவரங்களை கேட்டுள்ளார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர், தான் ராணுவ அதிகாரி என்றும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் காரை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அந்த ஊழியர், காரை வாங்குவதற்காக அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.4 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பிய பின்னர், அந்த நபர் தெரிவித்த இடத்திற்கு காரை வாங்க சென்றுள்ளார். ஆனால், அங்கு அந்த நபரோ, காரோ இல்லை. இதையடுத்து செல்போன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தனியார் நிறுவன ஊழியர் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





