கோவை : கோவை மாநகரில் நேற்று 411 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதையொட்டி மாநகரில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கடந்த 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாநகரில் 780 சிலைகளும், புறநகர் பகுதிகளில் 1,600 சிலைகளும் என மொத்தம் 2,380 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று முதல் விசர்ஜனம் செய்ய தொடங்கின. இதன்படி, வீடுகளில் பொதுமக்கள் பிரதிஷ்டை செய்த சிலைகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
கோவை குறிச்சி குளத்தில் 205 சிலைகளும், சிங்காநல்லூர் குளத்தேரி குளத்தில் 58 சிலைகளும், வெள்ளக்கிணறு குளத்தில் 148 சிலைகளும் என மொத்தம் 411 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்காணிக்கும் வகையில் மாநகர போலீசார் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தியிருந்தனர். மேலும், 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும் இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தீயணைப்புத்துறையினரும் தயார் நிலையில் இருந்தனர். ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஊர்வலம் முழுவதும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு கோவை மாநகரில் நேற்று மற்றும் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.





