AI வந்தாச்சு… இனி வழக்கறிஞர்களுக்கு சவால்! கோவையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பேச்சு

கோவை: கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற இந்திய வழக்குரைஞர் சங்கத்தின் 9-வது மாநில மாநாட்டில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், “நீதித்துறையில் AI மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது; வழக்கறிஞர்கள் ஆழ்ந்து படித்து நடுநிலையுடன் செயல்படாவிட்டால் AI அவர்களை தூக்கி சாப்பிட்டுவிடும்” என எச்சரித்தார்.

Advertisement

கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற இந்திய வழக்குரைஞர் சங்கத்தின் 9-வது மாநில மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது நீதித்துறை எதிர்கொள்ளும் கட்டமைப்பு பிரச்சினைகள், சட்டக் கல்வியின் நிலை, பார் கவுன்சில் செயல்பாடுகள், வழக்கறிஞர்களின் அரசியல் சார்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசினார்.

மாநாட்டில் பேசுவதற்காக மைக் முன்பு வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், தனது உரையை தொடங்குவதற்கு முன்பு, ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ திரைப்படத்தில் இடம்பெறும் “மனிதா மனிதா” பாடலின் இசையை ஒலிக்கச் செய்து, அந்தப் பாடலை முழுமையாக வழக்கறிஞர்கள் முன்னிலையில் பாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், பரிமாறிக் கொள்ள வேண்டிய செய்திக்காக இந்தப் பாடலை தேர்வு செய்ததாக தெரிவித்தார். நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்கள் சந்தித்து வரும் கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறினார்.

Advertisement

“மயிலிறகால் வருட நான் வரவில்லை. அறிவார்ந்த இடத்தில் மட்டுமே இதுபோன்ற கருத்துகளை பரிமாறிக் கொள்ள முடியும்” என தெரிவித்த அவர், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நீதித்துறை கட்டமைப்பு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், இது நீதித்துறையை பலவீனப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

வழக்கறிஞர் பணி உன்னதமானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், வழக்கறிஞர் தொழில் வியாபார நோக்கம் கொண்ட சந்தை அல்ல என்றும், நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க அஞ்சாமல் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

Advertisement

மேலும், சட்டக் கல்வியில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்தும் அவர் விமர்சனம் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் சட்டக் கல்லூரிகள் காளான்கள் போல உருவாகி வருவதாகவும், இதனால் சட்டக் கல்வியின் தரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகள் உள்ளதாகவும், இதில் 27 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களும் அடங்கும் என்றும் குறிப்பிட்ட அவர், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் குறைந்த அளவிலான வழக்கறிஞர்களையே உருவாக்குகின்றன என்றும், பெரும்பாலான வழக்கறிஞர்கள் மற்ற சட்டக் கல்லூரிகளில் இருந்து உருவாகின்றனர் என்றும் தெரிவித்தார்.

பல சட்டக் கல்லூரிகளில் 30 முதல் 50 சதவீதம் வரை பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், தற்காலிக பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். சில அரசு சட்டக் கல்லூரிகளில் போதுமான பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை என்றும், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பல்வேறு நவீன சட்டங்கள் குறித்து விரிவாக கற்பிக்கப்படும் நிலையில், பிற சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு அதே அளவிலான வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

பார் கவுன்சில் தேர்தல்கள் குறித்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்துகளை தெரிவித்தார். பார் கவுன்சில் தேர்தல்களில் அதிக அளவில் பணம் செலவிடப்படுவதாகவும், பணப் பரிமாற்றம் தொடர்பான புகார்கள் இருப்பதாகவும் கூறினார். சமூக வலைதளங்களில் சில வழக்கறிஞர்கள் சினிமா நடிகர்களைப் போல ரீல்ஸ் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கறிஞர்கள் அரசியல் சார்புடன் செயல்படுவது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். அரசியல் கட்சிகளில் இருந்தாலும் நீதிமன்ற பணியில் அரசியலை கலக்காமல் செயல்பட்ட வழக்கறிஞர்கள் முன்பு இருந்ததாகவும், தற்போது அரசியல் செல்வாக்கை பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தும் போக்கு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள் இடதுசாரி, வலதுசாரி என தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதை தவிர்த்து, நீதித்துறையின் பக்கம் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மாவட்ட வழக்கறிஞர் சங்கங்கள் முதல் உள்ளூர் வழக்கறிஞர் சங்கங்கள் வரை அரசியல் கட்சிகளின் பிரதிபலிப்பாக செயல்படும் நிலை உருவாகி இருப்பதாகவும், அடிக்கடி வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி குறித்து பேசிய அவர், “நீதித்துறையில் AI மொத்தமாக ஆட்டத்தை மாற்றப்போகிறது. இப்போது எல்லாவற்றையும் AI செய்து வருகிறது. இனி வரும் வழக்கறிஞர்களின் நிலை இன்னும் சவாலாக இருக்கப் போகிறது. வழக்கறிஞர்கள் ஆழ்ந்து படித்து, நடுநிலையாக இல்லாவிட்டால் AI அவர்களை தூக்கி சாப்பிட்டுவிடும்” என தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படும் கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு நடைமுறை இருக்கும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் வெளிப்படையான நடைமுறை தேவைப்படுவதாகவும் கூறினார்.

நீதித்துறைதான் ஏழை, எளிய மக்களின் கடைசி நம்பிக்கை என தெரிவித்த அவர், நீதிமன்றத் தீர்ப்புகளை அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் பார்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து முழுமையான தகவல் இல்லாமல் பலர் பதிவுகளை வெளியிடுவதாகவும், அவற்றை லட்சக்கணக்கானோர் பார்ப்பதாகவும் தெரிவித்த அவர், சமூக வலைதள தகவல்களை மட்டுமே நம்பும் நிலை அதிகரித்து வருவது கவலைக்குரியது என்றார்.

பார் கவுன்சில் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையை சுயேச்சையான ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சட்டத் துறையில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை கொண்டு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தகுதி மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்றும், நீதிமன்ற அறைக்கு வெளியே அரசியல் அடையாளங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நீதித்துறை இழந்துவரும் கண்ணியத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்தார்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் தனியார் பேருந்தால் ஏற்பட்ட விபத்து- பொதுமக்கள் வாக்குவாதம்…

கோவை: தனியார் பேருந்தால் வாகன ஓட்டி படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை திருச்சி சாலையில் அதிகவேகமாகச் சென்ற பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், வாகன ஓட்டி...