கோவை: மதுக்கரை ஏசிசி சிமெண்ட் ஆலையில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏசிசி தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் தூசுகளால் அப்பகுதி முழுவதும் தூசுகள் படர்ந்து உள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
வீடுகள் மரம் செடி கொடிகள் வாகனங்கள் உணவு என அனைத்திலும் தூசுபடிந்து விடுவதாகவும் இது குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறி அந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சாலையில் விரிவான ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த சிமெண்ட் ஆலையின் செயல்பாடுகள் குறித்து விரிவான சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், சுற்று வட்டார பகுதிகளில் காற்றின் தரத்தை அறிவியல் முறையில் பரிசோதனை செய்து மாசு அளவை பதிவு செய்ய வேண்டும், பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுப்புற நீர் நிலைகளின் தரத்தை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மூலம் பரிசோதிக்க வேண்டும்
தென்னை வாழை உள்ளிட்ட பயிர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வேளாண்மை துறை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும், அங்கு நிரந்தர தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ஆய்வுகளின் முடிவுகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த அச்சங்கத்தினர் பதாகைகளை ஏந்தியும், மாஸ்க் அணிந்தும் அங்குள்ள தூசு படர்ந்த செடிகளுடன் மனு அளித்தனர்.





