கோவை: தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதிகாலையிலேயே இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் அதிகாலையிலேயே இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இறைச்சிக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கிச் சென்றனர்.
இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மக்கள் உற்சாகமாகப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம், தீபாவளி நாளன்று உற்றார், உறவினர்களுடன் இணைந்து அசைவ உணவு சமைத்து விருந்து சாப்பிடுவது பல குடும்பங்களில் வழக்கமாக உள்ளது.
இதற்காக அதிகாலை முதலே இறைச்சிக் கடைகளில் விற்பனை களைகட்டியது. கோவை மாநகரில் ஆட்டிறைச்சி கிலோ ரூ.1,100-க்கும், கோழி இறைச்சி ரூ.300-க்கும், நாட்டுக்கோழி இறைச்சி ரூ.850-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வழக்கமான நாட்களைவிட தீபாவளி பண்டிகையின்போது இறைச்சி விலை சற்று அதிகமாக இருந்தாலும், பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகப் பொதுமக்கள் விலையைப் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் இறைச்சிகளை வாங்கிச் சென்றனர்.
குறிப்பாக செல்வபுரம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சிகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். வருடம் தோறும் இந்த பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






