கோவை: பெரியவர்களிடம் ஆசி பெற்று, பட்டாசு வெடித்து உற்சாகமாக தல தீபாவளி கொண்டாடிய புதுமணத் தம்பதியினர்.
கோவையில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், புதுமணத் தம்பதியினர் தங்களது முதல் தீபாவளியான தல தீபாவளியை உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகள் அணிந்து, சாமி தரிசனம் செய்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, புதுமணத் தம்பதிகளும் முதல் தீபாவளியான தல தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் – சங்கீதா புதுமண தம்பதியினர் தங்களது தல தீபாவளியை குடும்பத்தினருடன் கோலாகலமாகக் கொண்டாடினர். அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகள் அணிந்து சாமி தரிசனம் செய்த அவர்கள், வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், அக்கம்பக்கத்தினருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். புதுமணத் தம்பதிகளின் தல தீபாவளிக் கொண்டாட்டத்தால் அவர்களது இல்லமே மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்ததாகக் காணப்பட்டது.





