கோவை : திருமணமான பெண்ணுக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததுடன், அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை வடவள்ளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண், கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கும் வடவள்ளி வள்ளலார் நகரைச் சேர்ந்த மணிகண்டராஜ் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
நாளடைவில் மணிகண்டராஜ், அந்த பெண் வேறு யாரிடமும் பேசக்கூடாது என கூறி அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், மணிகண்டராஜுடனான பழக்கத்தை முறித்துக் கொண்டு அவரிடம் இருந்து விலகியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டராஜ், அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், வாட்ஸ்-அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் தொடர்ந்து மெசேஜ்கள் அனுப்பி அவரை டார்ச்சர் செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி மணிகண்டராஜ் அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரது கணவர் முன்னிலையில், அந்த பெண்ணை தனது மனைவி என கூறியதுடன், கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடுமாறும் மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சம்பவம் குறித்து வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டராஜை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





