கோவை : கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த குடும்பத்தினர் உடனடியாக கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
நீலம்பூர் பகுதியில் இருந்து கோவை நகரை நோக்கி குடும்பத்தினருடன் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கே.எம்.சி.எச் மருத்துவமனை எதிரே கார் வந்தபோது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென அடர்ந்த புகை வெளியேறியது.
இதைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக காரை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் காரில் இருந்த குடும்பத்தினர் அனைவரையும் பத்திரமாக கீழே இறங்கச் செய்தார்.
அவர்கள் காரை விட்டு வெளியேறிய சில வினாடிகளிலேயே, எஞ்சின் பகுதியில் பற்றிய தீ மளமளவென காரின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் நடுரோட்டில் கார் கொழுந்துவிட்டு எரிந்தது. இதைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
Video
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் இருந்தவர்கள் தீப்பற்றுவதற்கு முன்பே கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.





