கோவை: கோவை கோட்டூர், ஆனைமலையில் நெல் கொள்முதல் புகார்களை தெரிவிக்க அதிகாரிகளின் புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கோவை மண்டலத்தில் KMS 2026-2027 நேரடி நெல் கொள்முதல் நிலையம் கோட்டூர் மற்றும் ஆனைமலை ஆகிய பகுதியில் 1.10.2026 முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும் மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும்.
விவசாயிகளின் நெல்லிற்கு மத்திய அரசின் அடிப்படை ஆதார விலை சன்னரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2461 மற்றும் தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.289 என மொத்த குவிண்டால் ரூ.2750 மற்றும் பொதுரகத்திற்கு மத்திய அரசின் ஆதார விலை ரூ.2441 தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.159 என மொத்தம் குவிண்டால் ரூ.2600 வழங்கப்படும்.
விவசாயிகள் தங்கள் விளை நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கல், ஆதார், வங்கி புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகி e.dpc மூலம் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
மேலும் பதிவேற்றம் செய்யப்பட்ட விவசாயிகள் தொலைபேசி எண்ணிற்கு வரப்பெறும் குறுஞ்செய்தி அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் உரிய காலத்தில் தங்களது நெல்லினை விற்பனை செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் நெல், கொள்முதல் நிலையங்களில் பதிவு முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் ஒரு மூட்டை நெல்லின் எடை சாக்குடன் சேர்த்து 40.580 கிலோ கிராம் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும். கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குண்டான தொகையை 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கி கணக்கில் ECS மூலம் வரவு வைக்கப்படும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிநபர் தலையீடோ அல்லது பணம் கேட்பது தொடர்பாக புகார் இருப்பின் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தவும். விவசாயிகள் நெல் கொள்முதல் தொடர்பான புகார்களை
முதுநிலை மண்டல மேலாளர் 0422-2430437
மேலாளர் தரக்கட்டுப்பாடு 8610787020
உதவி மேலாளர் 9487510464
கண்காணிப்பாளர் (கொள்முதல் அலுவலர்) 8610766116
கட்டணமில்லா தொலைபேசி எண் 18005993540 மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
எனவே விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லினை விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்





