கோவை: தனது வங்கி மற்றும் UPI கணக்குகள் மூலம் ‘சிட்டி டிரேடர்ஸ்’ நிறுவன உரிமையாளர் ரூ.60 லட்சம் வரை பரிவர்த்தனை செய்துள்ளதாக கூறி, தீத்திபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் கோவை கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
தனது வங்கி மற்றும் UPI கணக்குகளை பயன்படுத்தி, வேடபட்டியைச் சேர்ந்த ‘சிட்டி டிரேடர்ஸ்’ நிறுவன உரிமையாளர் கணேஷ்குமார் சுமார் 8 மாதங்களில் ரூ.60 லட்சம் வரை வணிகப் பரிவர்த்தனை செய்துள்ளதாக கூறி, தீத்திபாளையத்தைச் சேர்ந்த என். வருண்குமார், கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வருண்குமார் கூறியதாவது:
எனது தனிப்பட்ட வங்கி மற்றும் UPI கணக்குகளை கணேஷ்குமார் தனது வணிகப் பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தியதாகவும், சுமார் 8 மாதங்களில் ரூ.60 லட்சம் அளவுக்கு பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வங்கி அறிக்கைகள், UPI பரிவர்த்தனை விவரங்கள், பணம் செலுத்தியதற்கான ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 18-ம் தேதி கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும், அதற்கு டிஜிகாப் மனு எண் PT-20260918-006 வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த மனு பேரூர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், புகாரின் முக்கிய அம்சங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், தன்னிடம் ரூ.4 லட்சம் பெற வேண்டியுள்ளதாக கணேஷ்குமார் அளித்த புகார் உண்மைக்கு புறம்பானது என்றும், அந்த தொகையை ஏற்கனவே திருப்பிச் செலுத்திவிட்டதாகவும் வருண்குமார் தெரிவித்தார்.
பேரூர் போலீசார் இருதரப்பினரையும் அழைத்த நிலையில், பின்னர் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பியதாகவும், அங்கு இன்ஸ்பெக்டர் இது சிவில் விவகாரம் எனக்கூறி இருதரப்பினரிடமும் எழுத்துப்பூர்வ விளக்கம் பெற்றதாகவும் அவர் கூறினார்.
தனது புகாருக்கான சி.எஸ்.ஆர். நகலை கேட்டபோது வழங்கப்படவில்லை என்றும், சமரசம் செய்து கொண்டதாக எழுதி கொடுத்துவிட்டு செல்லுமாறு போலீசார் தெரிவித்ததாகவும் வருண்குமார் குற்றம்சாட்டினார். ஆனால், தான் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, தனது புகாருக்கு பின்னர் தனக்கு எதிராக தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பதிவு நேரம் மற்றும் ஸ்டேஷன் டைரி உள்ளிட்ட ஆவணங்களை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கடந்த செப்டம்பர் 24-ம் தேதி கணேஷ்குமார் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிட்டதாகவும், இதனால் தனது சமூக மரியாதை மற்றும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷின் பெயரை குறிப்பிட்டு, கணேஷ்குமார் தனது நெருங்கிய நண்பர் எனக் கூறி தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாகவும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தனது வங்கி மற்றும் UPI கணக்குகளில் நடைபெற்ற பரிவர்த்தனைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதில் சட்ட விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வருண்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் குறித்தும் விசாரணை நடத்துவதுடன், தனது வங்கி அறிக்கைகள், பரிவர்த்தனை ஆதாரங்கள், அழைப்பு விவரங்கள் மற்றும் சமூக வலைதள ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





