கோவை : கோவையில் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3.6 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 58 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
கோவையில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உக்கடம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள உணவகம் அருகே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக உக்கடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அருண் (20), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஷ் (22), மதுரையைச் சேர்ந்த ராமன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.6 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், சுந்தராபுரம் – மதுக்கரை சாலை மோகன் நகர் பாலத்தின் கீழ் பகுதியில் சுந்தராபுரம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மெத்தபெட்டமைன் விற்பனைக்காக வைத்திருந்ததாக 3 பேரை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் சிட்கோ பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (எ) பீமா (25), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அருண்பண்டி (எ) பாக்கு (27) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த கோபிநாத் (எ) மியா கோபி (21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 58 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சோதனைகளில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Coimbatore Drug Crime: 6 arrested for selling ganja chocolates and methamphetamine






