பெருமாள்முடி, மேல்முடி : பக்தர்களை குறைப்பது கோவை மாவட்ட நிர்வாகத்தின் வேலையா?

கோவை: புரட்டாசி சனிக்கிழமைகளில் மேல்முடி மற்றும் பெருமாள் முடிக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பது ஆண்டுதோறும் தெரிந்த விஷயமாக இருந்தும், அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்வதை விட்டுவிட்டு, பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருப்பது பக்தர்கள் மற்றும் மலையேற்ற ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள பெருமாள்முடி மற்றும் மேல்முடி மலைக்கோவில்களுக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால், இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

ஆனால், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிப்பதற்கு பதிலாக, பக்தர்கள் எண்ணிக்கைக்கே கட்டுப்பாடு விதிக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

வனப்பகுதிக்குள் அதிக அளவில் மக்கள் கூடுவதால் வனப்பகுதியை பாதுகாப்பது, வன உயிரினங்கள் மற்றும் பல்லுயிர்களை பாதுகாப்பது, குப்பைகள் சேருவதை தடுப்பது, காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதன்படி, பெருமாள்முடி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாங்கரை சோதனைச் சாவடி வழியாக மட்டுமே செல்ல வேண்டும். மேல்முடி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பாலமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தடாகம் வழியாக மேல்முடிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு செல்லும் பக்தர்கள் மாலை 4 மணிக்குள் சம்பந்தப்பட்ட சோதனைச் சாவடிக்கு திரும்பி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இதில் முக்கியமாக பெருமாள்முடி கோவிலுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்களின் எண்ணிக்கையும் 250 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் அடங்கும்.

மேல்முடி கோவிலுக்கும் அதிகபட்சமாக 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்களின் எண்ணிக்கை 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, வனப்பகுதியை சுத்தம் செய்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்காக ஒரு நபரிடமிருந்து ரூ.15 பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினரால் உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியை பாதுகாப்பது, காட்டுத்தீயை தடுப்பது, குப்பை சேராமல் பார்த்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் அவசியமானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்கான தீர்வாக பக்தர்களின் எண்ணிக்கையை குறைப்பது மட்டுமே சரியான அணுகுமுறையா? என்பதுதான் தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.

ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கோவில்களுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவது மாவட்ட நிர்வாகத்திற்கு புதிதான விஷயம் அல்ல. பல ஆண்டுகளாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் நிர்வாக ரீதியான திட்டமிடல், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து கட்டுப்பாடு, குப்பை மேலாண்மை மற்றும் வனப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே நிர்வாகத்தின் பொறுப்பு என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

பக்தர்கள் அதிகமாக வருகிறார்கள் என்ற காரணத்தை கூறி, ‘1000 பேருக்கு மட்டுமே அனுமதி’, ‘500 பேருக்கு மட்டுமே அனுமதி’ என்று எண்ணிக்கையை நிர்ணயிப்பது எளிதான தீர்வாக இருக்கலாம். ஆனால், தொலைதூரங்களில் இருந்து பல மணி நேரம் பயணம் செய்து வரும் பக்தர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கோவில்களுக்கு சென்று வழிபடுவதை பலர் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட நாளில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆன்மிக நம்பிக்கையுடன் வரும் பக்தர்களிடம், ‘1000 பேர் முடிந்துவிட்டது; இனி அனுமதி இல்லை’ என்று கூறுவது அவர்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் வகையில் இருப்பதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேபோல், மலைப்பகுதிகளில் இயற்கையோடு பயணம் செய்வதையும், மலையேற்றத்தையும் விரும்பும் ஏராளமானோர் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளனர். அவர்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

மலையேற்றப் பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கலாம். குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு குழுக்களை அமைக்கலாம். குப்பைகளை எடுத்துச் செல்லும் முறையை கட்டாயமாக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தடுக்கலாம். காட்டுத்தீ ஏற்படாத வகையில் தீப்பற்றக்கூடிய பொருட்களை தடை செய்யலாம். அவசர கால மருத்துவக் குழுக்களை அமைக்கலாம். வாகன நிறுத்துமிடங்களை முறைப்படுத்தலாம்.

இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னரும், பக்தர்கள் மற்றும் மலையேற்ற ஆர்வலர்களுக்கு பாதுகாப்பான முறையில் மலையேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும். ஆனால், இதுபோன்ற ஏற்பாடுகளை செய்யாமல், பக்தர்களின் எண்ணிக்கையையே குறைப்பது அரசின் தவறான கொள்கை என பக்தர்கள் மற்றும் மலையேற்ற ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஒரு நாளில் 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றால், அந்த எண்ணிக்கை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது? அதற்கான அறிவியல் அடிப்படை என்ன? வனப்பகுதியின் தாங்கும் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதா? பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கேற்ப கூடுதல் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த முடியாதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

வனப்பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் ஆன்மிக மற்றும் இயற்கை சார்ந்த பயணங்களுக்கு நிரந்தரமாக தடைகளை உருவாக்குவது தீர்வாகாது. மாறாக, சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, பக்தர்களையும் அனுமதிக்கும் வகையில் ஒரு நீண்டகால திட்டத்தை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

புரட்டாசி சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதை விட, ‘கூட்டம் அதிகம்; அதனால் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கிறோம்’ என்ற அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“பக்தர்கள் அதிகமாக வருவது பிரச்சினை என்றால், அவர்களை தடுக்காமல் நிர்வாகம் தனது ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அரசின் கடமை. அதனை செய்யாமல் பக்தர்களின் எண்ணிக்கையை குறைப்பது எந்த வகையில் நியாயம்?” என்ற கேள்வியையும் பக்தர்கள் எழுப்பி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் மலையேற்றத்திற்கு குடும்பத்துடன் ஆவலுடன் வருவோர், தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இதனால் அடிவாரப்பகுதிகளில் சனிக்கிழமை தோறும் மக்கள் வனத்துறையினர் இடையே தேவையில்லாத விவாதங்களும், சலசலப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இது மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை மீது மக்களுக்கு வீண் அதிருபதியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பக்தர்கள் அதிகமாக வருகிறார்கள் என்பதற்காக கோவிலுக்கு செல்லும் வழியை மூடுவது தீர்வல்ல; அதிகமான பக்தர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, வனப்பகுதியையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதே நிர்வாகத்தின் உண்மையான பொறுப்பு என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியமான கருத்தாக உள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வடகிழக்கு பருவமழை- கோவை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீரை சேமிப்பதன் அவசியம் குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழை கோயம்புத்தூர் மாநகரப் பகுதிகளில் அதிகளவில் மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மழைநீரை...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...