கோவை: மருத்துவர்களின் சேவை சமூகத்தின் கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தி உள்ளார்.
மருத்துவர்கள் வெறும் சிகிச்சையளிப்பதோடு நின்றுவிடாமல், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் தங்களது சேவை சென்றடையும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தினார்.
கோவை சூலூர் பகுதியில் உள்ள ஆர்.வி.எஸ். பல் மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இளநிலை (பி.டி.எஸ்.) மற்றும் முதுநிலை (எம்.டி.எஸ்.) பட்டப்படிப்புகளை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்.
பின்னர் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, மருத்துவப் படிப்பு முடித்து பட்டம் பெறுவது வெறும் கல்வித் தகுதி மட்டுமல்ல; அது சமூகத்திற்கான மிகப்பெரிய பொறுப்புணர்வாகும்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வெறும் சிகிச்சைக்கான நபராகப் பார்க்காமல், அவர்களைத் தங்கள் குடும்ப உறுப்பினராகக் கருதி கனிவோடும் மனிதநேயத்தோடும் அணுக வேண்டும். நோயாளிகள் மருத்துவர்கள் மீது வைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை ஒருபோதும் சிதைத்துவிடக் கூடாது.
கோவை, சென்னை போன்ற பெருநகரங்களில் கிடைப்பது போன்ற உயர் மருத்துவக் கட்டமைப்புகளும், தரமான சிகிச்சைகளும் கூடலூர், சத்தியமங்கலம் போன்ற வனப்பகுதிகளில் வாழும் எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அதற்கேற்ப இளம் மருத்துவர்கள் கிராமப்புறங்களுக்கும் பழங்குடியினப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று மருத்துவ முகாம்களை நடத்தி சேவையாற்ற முன்வர வேண்டும்.
பள்ளிச் சிறார்களிடையே வாய் சுகாதாரம் மற்றும் வாய் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 3டி பிரிண்டிங் உள்ளிட்ட நவீன வசதிகள் பெருகி வருகின்றன.
இந்தத் தொழில்நுட்பங்கள் மருத்துவர்களுக்குத் துணையாக இருக்கலாமே தவிர, மருத்துவர்களின் மனிதநேய உணர்வுக்கு அவை ஒருபோதும் மாற்றாக முடியாது. தொழில்நுட்பங்களை மக்கள் நலனுக்காக வேகமாகவும் சரியான வழியிலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாடு முழுவதும் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளும், 387 மருத்துவக் கல்லூரிகளுமே இருந்தன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அவை பன்மடங்கு உயர்த்தப்பட்டு, தற்போது 23-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளும், 846 மருத்துவக் கல்லூரிகளும் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. மருத்துவ இடங்கள் 51 ஆயிரத்திலிருந்து 1.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் 31 ஆயிரமாக இருந்த முதுநிலை மருத்துவ இடங்கள் 86 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளன. நாட்டின் உள்கட்டமைப்புகளான சாலை, ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் வியத்தகு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. விமானப் பயணம் என்பது எளிய மக்களுக்கும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு புல்லட் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதுடன், பல்வேறு நகரங்களிடையே விரைவு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் நேர மேலாண்மை, தொழில் பக்தி மற்றும் கடுமையான உழைப்பின் மூலமாகவே உலக அரங்கில் வல்லரசாக உருவெடுத்தன. அந்த நாடுகளின் காலந்தவறாமை மற்றும் ஒழுக்கத்தை இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.
ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில், வரும் 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகிலேயே முதன்மை பொருளாதார நாடாகவும், முழுமையான வளர்ச்சி அடைந்த தேசமாகவும் மாற்றும் பெரும் பொறுப்பு இன்றைய இளம் தலைமுறையினரிடமே உள்ளது என்றார்.






