கோவை: எஸ்.ஐ.ஆர். பணிகளால் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட தலைவர்களின் தேர்தல் வெற்றி குறித்தும் சந்தேகம் எழுவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில், இதன் தாக்கத்தால் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் தேர்தல் வெற்றி குறித்தும் சந்தேகம் எழுவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தாராபுரத்தில் சத்தியபாமா, மதுராந்தகத்தில் மரகதம் உள்ளிட்ட 6 பேர் ஆளும் கட்சிக்கு சென்றுள்ளனர். வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே கட்சி மாறியவர்களுக்கு எதிர்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஆதாயத்திற்காக கட்சி மாறுவதும், அதற்காக மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதும் தடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எம்.எல்.ஏ.க்களுக்கு மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இடைத்தேர்தல் அமைய வேண்டும்.
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் பணம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் நடைபெற வேண்டும். தேர்தல் ஆணையம் பணப்புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். இன்றும் நாளையும் முக்கியமான நாட்கள் என்பதால், மக்கள் எந்தவித தூண்டுதலுக்கும் ஆளாகாமல் வாக்களிக்கும் சூழலை அனைத்து கட்சிகளும் ஏற்படுத்த வேண்டும்.
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக பேசிய அவர், கடந்த காலங்களில் நடைபெற்ற பணிகளில் பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்ததாகவும், தற்போது 16 கோடி பெயர்கள் விடுபட்டதாக செய்திகள் வருவதாகவும் தெரிவித்தார்.
இந்திய குடிமக்களின் வாக்குரிமை பறிக்கப்படக்கூடாது. வாக்காளர் பட்டியலில் இருந்து 16 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை முறையாக பராமரிப்பது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பு.
படிவம் 6 தொடர்பாகவும் குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த முறை எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது சில கேள்விகள் இடைச்செருகலாக இடம்பெற்றதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேர்தலின்போது பதிவு செய்யப்படும் வழக்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவது நல்ல நடைமுறை அல்ல என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.
தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாக பேசிய அவர், தவெக வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாகவும், இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் முன்மாதிரியாகவும், தூய்மையாகவும் நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே வேறு கட்சிக்கு செல்லும் எம்.எல்.ஏ.க்களை மீண்டும் தேர்தலில் நிறுத்தக்கூடாது. இதுபோன்ற கட்சி மாறுதல்களை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பாக பேசிய கிருஷ்ணசாமி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைவாக உள்ளதாக தெரிவித்தார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் மூலம் 4 லட்சம் ஏக்கர் பாசனம் மேற்கொள்ளும் திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை என்றும், ஆனைமலை – நல்லாறு திட்டமும் நீண்ட காலமாக நிறைவேறாமல் இருப்பதாகவும் கூறினார்.
கேரள அரசின் ஒத்துழையாமையால் கடந்த 41 ஆண்டுகளாக ஆனைமலை – நல்லாறு திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்றும், இதனை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனை வலியுறுத்தி நவம்பர் மாதம் புதிய தமிழகம் கட்சி சார்பில் பிரம்மாண்ட வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.
தவெக குறித்தும் விமர்சனம் செய்த அவர், விஜய் இனிமேலும் கவர்ச்சியை மட்டுமே வைத்து வாக்குகளை பெற முடியாது என்றும், அதனால் தான் இரண்டு தொகுதிகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தவெக சார்பில் வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பிய அவர், கட்சி தலைமை வழங்கவில்லை, கட்சியினர்தான் வழங்குகிறார்கள் என்று கூறினாலும் அது ஊழலாகவே கருதப்படும் என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






