கோவை: வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் புகுந்த காட்டு யானைகள், அங்கன்வாடி மையம் மற்றும் ஆளில்லாத குடியிருப்பு கட்டிடத்தைச் சேதப்படுத்தின. குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்து கட்டிடங்களை உடைத்த சம்பவம், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேரள மாநில எல்லைக்குட்பட்ட மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்தன.
அங்கு வந்த யானைகள், அங்கிருந்த அங்கன்வாடி மையம் மற்றும் ஆளில்லாத குடியிருப்புக் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தின. இதில் கட்டிடங்களின் சுவர்கள் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தன.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனர். வனத்துறையினரும் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்து நீண்ட முயற்சிக்குப் பிறகு காட்டு யானைகளை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.
யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர். இருப்பினும், வால்பாறை மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவை குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






