நடந்து முடிந்த இடைத்தேர்தல்- நயினார் நாகேந்திரனின் கருத்து…

கோவை: இந்த தேர்தலை ஆரோக்யமான ஜனநாயகம் என்று கூற முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்தார்.
1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வந்துள்ளதாகவும், அதே முறையில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏற்கெனவே வெற்றி பெற்ற வேட்பாளர், அந்தப் பதவியிலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தொடர்பான கேள்விக்கு, இதனை ஆரோக்கியமான ஜனநாயகமாகக் கருத முடியாது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது என்பதே தனது கருத்து என்றும் கூறினார். நியாயமாகச் சிந்திக்கும் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். இது அவர்களின் சுயநலத்தைக் காட்டுவதாகக் கூறினார். குதிரை பேரம் நடைபெற்றதால்தான் இந்தத் தேர்தல் வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களின் சுயநலத்திற்காக மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இனிமேலாவது மக்களின் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டுமே தவிர, சுயநலத்துடன் செயல்படக் கூடாது என்று அறிவுறுத்துவதாகத் தெரிவித்தார்.

Advertisement

ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் தற்போது அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது குறித்த கேள்விக்கு, இரண்டாவது இடம், மூன்றாவது இடம் என்பதையெல்லாம் பார்க்க வேண்டியதில்லை; வெற்றி, தோல்விகளை மட்டுமே பார்ப்பதாகக் கூறினார். மேலும், எந்தக் காரணமும் இல்லாமல் நடைபெற்ற தேர்தல் இந்த இடைத்தேர்தல் என்றும் தெரிவித்தார்.

அதிமுக, பாஜகவின் கிளையாகச் செயல்பட்டதால்தான் தோல்வியடைந்தது என்று அமைச்சர் வன்னியரசு கூறியது குறித்த கேள்விக்கு, “ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாகக் கூறுவார்கள்” என்ற பழமொழியைக் குறிப்பிட்டுப் பதிலளித்தார். இவர்கள் எல்லாம் நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் என்றும், முன்பு பாஜகவை யாரும் கூட்டணியில் சேர்க்காத நிலையில், பின்னர் அதிமுகவுடன் இணைந்து மத்தியில் ஆட்சி அமைத்ததாகவும் கூறினார். திமுகவும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்துள்ளது. இந்த வரலாறுகள் தெரியாமல் சிலர் பேசுவதாக விமர்சித்தார்.

Advertisement

கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்கும் நிலையில், இடைத்தேர்தலில் அவர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு, விமர்சித்தது குறித்த கேள்விக்கு, ஆளும் கட்சிக்கு எதிராக அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள் என்பது தனது கருத்து என்று தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் விஜய் ஐந்து தொகுதிகளுக்குச் சென்றுதான் பிரசாரம் மேற்கொண்டார் என்றும், தற்போது ஒரு தொகுதியில் மட்டும் 39 இடங்களில் இறங்கி, வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்துள்ளார் என்றும் கூறினார். வாக்குகளுக்குப் பணம் கொடுத்திருப்பதாகவும், எனவே இந்த இடைத்தேர்தலை மட்டும் வைத்து வாக்கு சதவீதத்தைக் கணக்கிட முடியாது என்றும் தெரிவித்தார்.

முதலில் விஜய் வீட்டிற்குள் இருந்ததாகவும், தாங்கள் அவரை வெளியே வருமாறு கூறியதாகவும், தற்போது அவர் வீதிக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த விஷயத்தை அவரிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நான்கு மாத கால ஆட்சி குறித்த கேள்விக்கு, “ஐயையோ, மீண்டும் மீண்டும் என்னைச் சொல்ல வைக்கிறீர்களே” என்று கூறிய அவர், கடந்த 154 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்களும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இதில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும், காவல் நிலைய மரணங்கள் மற்றும் பிற குற்றச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறிய அவர், மின்வெட்டு, குடிநீர்ப் பற்றாக்குறை, கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதால், எதிர்காலத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும் என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்களைப் பார்த்து, “நீங்களாவது முதலமைச்சரைப் பேச வைத்தால் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்” என்று கூறினார்.

செவிலியர்களின் போராட்டம் தொடர்பான கேள்விக்கும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக ஆதவ் அர்ஜுனா வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கும் பதிலளித்த அவர், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும், ஆளும் கட்சியாக இருக்கும்போது மற்றொரு நிலைப்பாடும் இருப்பதாகக் கூறினார்.

ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்ற பிறகு தமிழக வெற்றிக் கழகத்திற்கான மக்களின் ஆதரவு சரிந்துள்ளதாகவும், இல்லையென்றால் 30 முதல் 40 இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார். இனிவரும் காலங்களில் அவர்களின் செல்வாக்கு மேலும் சரியும் என்றும் கூறினார்.

SIR தொடர்பாகத் தேர்தல் அதிகாரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெறுவது குறித்த கேள்விக்கு, SIR குறித்து மீண்டும் மீண்டும் விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். சுமார் 12 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்தார். அதில் இரண்டு கோடி பேர் உயிரிழந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். உதாரணமாக, தங்கள் வீட்டிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் சொர்க்கத்திலும் நரகத்திலும் இருப்பதாகவும், ஆனால் ராகுல் காந்தி அவர்களையெல்லாம் அழைத்து வந்து வாக்களிக்க வைக்க வேண்டும் என்று கூறுவதாகவும் விமர்சித்தார். ராகுல் காந்தியையே அங்கு அனுப்பி, உயிரிழந்தவர்களையெல்லாம் அழைத்து வரச் சொல்ல வேண்டும் என்று கிண்டலாகக் கூறினார்.

ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வருவதாகவும்,ந் முதலமைச்சர் வீட்டில் உணவருந்த உள்ளதாகக் கூறப்படுவதாகவும் தெரிவித்தார். இது முதலமைச்சருக்கும் நேர விரயம்தான் என்றும் விமர்சித்தார். முதலமைச்சர் மக்கள் மத்தியில் நடிப்பதாகக் கூறிய அவர், ராகுல் காந்திக்கு நடிக்கக்கூடத் தெரியவில்லை என்றும், தடுப்புவேலிகள் மீது ஏறி, சங்கிலியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பதாகவும் கிண்டல் செய்தார்.

ராகுல் காந்தி இந்தியாவை விட்டு வெளியேறினாலே இந்தியாவுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது என்று கூறிய அவர், இத்தாலிக்குச் சென்று குடியேறுமாறும் விமர்சித்தார்.

நாளை பிரதமர் வருகை தருவது குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், பிரதமர் தனது 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்தை உலக அளவில் உயர்த்தியவர் என்றும், தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டங்களைக் கொண்டு வந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

சென்னை ஐஐடியில் மூளை ஆராய்ச்சி தொடர்பான ஆய்வைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ரூ.65,000 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் ரூ.75 கோடி மதிப்பில் ரயில் நிலையங்களைப் புதுப்பிக்கும் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

நாளை காலை 10 மணிக்கு சென்னை வரும் பிரதமர், அங்கிருந்து போரூருக்குச் சென்று, பின்னர் மெட்ரோ ரயிலில் பூந்தமல்லிக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். பூந்தமல்லியில் இருந்து மீண்டும் போரூருக்குத் திரும்பி, அங்கிருந்து சென்னை ஐஐடிக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர், மீண்டும் டெல்லிக்குப் புறப்படுவார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...