கோவை : கோவை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருண், நரேஷ் ஆகிய 2 பேர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை விமான நிலையம் அருகே சித்ரா சந்திப்பு பகுதியில் நட்சத்திர ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் சட்டவிரோதமாக விபசாரம் நடைபெற்று வருவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குச் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஓட்டலின் 216-வது அறையில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தப்பட்டு வந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அங்கு நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கோவை விமான நிலையத்துக்கு அருகில் இந்த நட்சத்திர ஓட்டல் அமைந்துள்ளதால், தொழில் நிமித்தமாக கோவைக்கு வரும் தொழில் அதிபர்களைக் குறிவைத்து விபசாரம் நடத்தப்பட்டு வந்ததாகத் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், விபசாரம் நடத்தியதாகக் கூறப்படும் வருண், நரேஷ் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கோவை மாநகரில் உள்ள சில நட்சத்திர ஓட்டல்கள், பீளமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் ஓட்டல்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் சட்டவிரோதமாக விபசாரம் நடைபெறுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
விமான நிலையம் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் செயல்படும் ஓட்டல்களில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதைத் தடுக்க, போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக, நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் அவ்வப்போது ரகசிய சோதனைகள் நடத்தி, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.






