கோவை : கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பெண் பயணிகளிடம் ரூ.55.45 லட்சம் மதிப்பிலான 382.54 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, புனே, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதனால் கோவை விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகக் காணப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கம், வைரம், போதைப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்படுவதைத் தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் தங்க நகைகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர்.
அப்போது விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த 2 பெண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த பதில்களில் முரண்பாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் தனியாக அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவர்கள் கொண்டு வந்த பைகளைச் சோதனை செய்தனர்.
அப்போது பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.55 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான 382.54 கிராம் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும், தங்க நகைகள் கடத்தி வரப்பட்டதன் நோக்கம் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






