கோவை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் ஒப்புதலுடன் 1,04,000 பணியாளர்கள் களத்தில் தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்கு முதலமைச்சரின் ஒப்புதலோடு தேவையான அளவிற்கு 1,04,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் அரசு அலுவலர்கள் மட்டுமன்றி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.), களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, 250 படகுகளும் அவற்றுடன் மீனவர்களும் முழு தயார் நிலையில் உள்ளனர்.
சுமார் 13 கோடி வாக்காளர்கள் விடுபட்டுள்ளதாகக் கூறி எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு, இது தொடர்பாகத் துறை ரீதியாக விரிவாக ஆய்வு செய்து உரிய பதில்கள் அளிக்கப்படும் என்றார்.
அதிமுகவிலிருந்து 15 எம்.எல்.ஏ.க்கள் இணையவுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 15 பேர் வருவார்கள் என்றுதான் கூறினேனே தவிர, 15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று எந்த இடத்திலும் நான் குறிப்பிடவில்லை. அவ்வாறு நான் கூறியதாக ஏதேனும் ஆதாரம் இருந்தால் சுட்டிக்காட்டட்டும்.
அவர்களாகவே ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். என்றார்.
மேலும், உலகத்தை சில தலைவர்கள் வென்று காட்டியிருக்கிறார்கள், ஆனால் காலத்தை யாராலும் வெல்ல முடியாது. அந்தக் காலத்தையே வென்று காட்டியவர் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் என்றும் குறிப்பிட்டார்.
அதிமுகவினர் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் குறித்துக் கேட்டபோது, அவர்களுக்கு இதுவே வாடிக்கையாகப் போய்விட்டது என்றும், மக்களுக்கு விரைந்து சென்று பணியாற்ற வேண்டிய இந்த முக்கிய நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கூறி நேரத்தை விரயம் செய்யத் தேவையில்லை என்றும் நிராகரித்தார்.
அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது அதிமுகவின் இரு பிரிவுகளிடமும் கேட்க வேண்டிய கேள்வியே தவிர, தன்னிடம் கேட்க வேண்டியது அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது ஒரு வகையில் தனக்குச் செய்த நன்மையே என்றும், அங்கிருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று அமைச்சராகியிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், தன்னைத் தாங்கிப் பிடித்து இன்று அமைச்சராக்கி அழகு பார்க்கும் கழகத் தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.






