கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீண்ட நாட்களாக மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காததால், பொதுமக்களும் விவசாயிகளும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மழையை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் போதிய மழையின்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நீர்நிலைகளில் நீர்வரத்து மற்றும் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாகவும் கவலை நிலவி வருகிறது.
இதற்கிடையே, கோவையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான வானிலை நிலவுகிறது. நீண்ட நாட்களாக மழையை எதிர்பார்த்துக் காத்திருந்த பொதுமக்கள், மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.
கோவையில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி, துடியலூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்வதால் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
மழையின்றித் தவித்து வந்த நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக, விவசாயப் பணிகளுக்குத் தேவையான மழை கிடைத்தால் பயிர்கள் வளர்ச்சியடைவதுடன், நீராதாரங்களும் மேம்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
வீடியோ காட்சிகள்
இருப்பினும், கோவையில் பெய்து வரும் மழை நீர்நிலைகளின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கும் போதுமானதாக இருக்குமா என்பது தொடர்ந்து பெய்யும் மழையைப் பொறுத்தே அமையும்.






