கோவை: மழை பாதிப்புக்கு உள்ளான பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் மழையால் பாதிப்புக்குள்ளான பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
கோவையில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையால் தடாகம் சாலை, சோமையனூர் பகுதியில் உள்ள VKV அவென்யூ குடியிருப்புப் பகுதியில் மழைநீர் வழிந்து போகாமல் குளம்போல் தேங்கியது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும், அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் மழையை ஒட்டிய பகுதி என்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புகளுக்குள் வந்துவிடும் என்று ஐயப்பாடு நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் நேற்று வீடியோ வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அறிவுறுத்தலின் பெயரில் அப்பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டது. மேலும், இனிவரும் நாட்களில் மழை பெய்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகப் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அப்பகுதி மக்களிடம் உரையாடி குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அப்பகுதி மக்களின் கோரிக்கைகளான மழைநீர் வடிகால் வசதி மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி சந்தோஷ் உறுதியளித்துள்ளார்.






