கோவை: வடவள்ளி–மருதமலை சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
கோவை வடவள்ளி–மருதமலை சாலை கடந்த நான்கு மாதங்களாகச் சீரமைக்கப்படாமல் மோசமான நிலையில் இருப்பதால், நெடுஞ்சாலைத் துறை உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
பணிகள் விரைந்து தொடங்கப்படாவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளி–மருதமலை சாலை சேதமடைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, திமுக கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று சாலையின் தற்போதைய நிலையை நேரில் ஆய்வு செய்தனர்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சாலை தோண்டப்பட்டு நான்கு மாதங்களாகியும் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சாலையின் மோசமான நிலையால் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத் துறை உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்றும் துரை. செந்தமிழ் செல்வன் வலியுறுத்தினார்.
பணிகளைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், திமுக சார்பில் பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.






