கோவை: கோவை மாவட்டத்தில் நாளை முதல் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. சுமார் 2.54 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நாளை (அக்.26) முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பாலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைட்டமின் ‘ஏ’ சத்து குழந்தைகளின் கண் பார்வையைப் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், தோல், திசுக்கள் மற்றும் எலும்புகளின் சீரான வளர்ச்சிக்கும் அவசியமானது எனத் தெரிவித்துள்ளார்.
வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாட்டால் மாலைக்கண் நோய் உள்ளிட்ட கண் பாதிப்புகள் ஏற்படுவதுடன், உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பார்வை இழக்கும் அபாயமும் உள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில், தேசிய அளவில் ஆண்டுக்கு இருமுறை 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 90 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 530 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 1,697 அங்கன்வாடி மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது.
இப்பணியில் பொதுச் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 728 களப்பணியாளர்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த 1,452 களப்பணியாளர்களும் ஈடுபட உள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 2,54,850 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர்கள் தங்களது 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை அருகிலுள்ள முகாம் மையங்களுக்கு அழைத்துச் சென்று வைட்டமின் ‘ஏ’ திரவத்தை வழங்கி, குழந்தைகளின் கண் பார்வையைப் பாதுகாக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பாலுசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.






