கோவை: சீர் மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு, இயற்கை மரணம், கல்வி, திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை உதவித்தொகையும், இயற்கை மரணத்துக்கு ரூ.30 ஆயிரமும், ஈமச்சடங்கு செலவுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும், கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 முதல் ரூ.8,000 வரையும், திருமண உதவித்தொகையாக ரூ.3,000 அல்லது ரூ.5,000 வரையும் வழங்கப்படுகிறது.
மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6,000, மூக்குக் கண்ணாடி செலவுக்காக ரூ.750 வரை உதவித்தொகையும், முதியோர் ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.1,200-ம் வழங்கப்படுகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அமைப்புசாரா தொழில்கள், நிலமற்ற விவசாயக் கூலி உள்ளிட்ட உடலுழைப்புத் தொழில்களில் ஈடுபடுபவர்கள், தகுதியின் அடிப்படையில் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்.
நல வாரியத்தில் புதிதாக உறுப்பினராகப் பதிவு செய்தல், பதிவைப் புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக www.dncwb.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள், தங்களது உறுப்பினர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.






