கோவை: கோவை செல்வபுரத்தில் 2 ஆண்டுகளாகத் தொடரும் மழைநீர் பாதிப்பு குறித்து மக்கள் வேதனை தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள சிந்தாமணி குளம் நிரம்பியுள்ளதால், அதிலிருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அருகிலுள்ள பிரபு நகர், அசோக் நகர் பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் அன்றாடத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன உயிரினங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதாகவும், இதனால் குழந்தைகளை வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதே பெரும் சவாலாக இருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ள ஒன்றல்ல என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதே பிரச்சினையைச் சந்தித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மழை பெய்யும்போதெல்லாம் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதும், பின்னர் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதையாகி வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, மழைநீரால் பாதிக்கப்பட்ட பிரபு நகர், அசோக் நகர் பகுதிகளில் அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரும் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.
அமைச்சர் ஆய்வு வீடியோ
தற்போது, தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் உறிஞ்சி, லாரிகள் வாயிலாக வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், தற்காலிகமாக மழைநீரை வெளியேற்றுவது மட்டுமே தீர்வாகாது என்றும், ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாதிப்புகளைச் சந்தித்து வரும் தங்களுக்கு அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும், மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுவதைத் தடுக்க முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்குவது, பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன உயிரினங்கள் குடியிருப்புகளுக்குள் வருவது என அச்சத்தில் வாழும் மக்களின் பிரச்சினைக்கு எப்போது நிரந்தரத் தீர்வு கிடைக்கும்? என்பது தற்போது எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.
Rainwater flooding in Selvapuram, Coimbatore, affecting Prabhu Nagar and Ashok Nagar residents, with snakes entering residential areas.






