கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாலும், கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதாலும், சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக அருவி நாளை (அக். 29) மீண்டும் திறக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலம் அருவி, போளுவாம்பட்டி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் சாடிவயல் பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி இரவு முதல் பெய்த கனமழை காரணமாக, அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 24ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வந்த காரணத்தால் கடந்த 26 ஆம் தேதி பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் உட்பட கோவை மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளது.
இதன் காரணமாக அருவிக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளதால், நாளை முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக அருவிக்குச் செல்ல முடியாமல் இருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






