கோவை: கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்நாக்ஸ் கடையில், வாடிக்கையாளர் போல வந்த நபர் ஒருவர் செல்போனைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கோவை டவுன்ஹால் மற்றும் வைசியாள் வீதிப் பகுதிகள் எப்போதும் வணிக நடவடிக்கைகளால் பரபரப்பாகக் காணப்படும். இந்நிலையில், வைசியாள் வீதியில் உள்ள ஸ்நாக்ஸ் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், ஸ்நாக்ஸ் வாங்குவதற்காக ஆர்டர் செய்துள்ளார். கடை ஊழியர் பொருட்களைப் பொட்டலமாக்கிக் கொண்டிருந்தபோது, அவரிடம் பேச்சுக் கொடுத்து கவனத்தைத் திசைதிருப்பியதாகக் கூறப்படுகிறது.
அப்போது மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த ஊழியரின் செல்போனைத் தந்திரமாகத் தனது பையில் எடுத்துக்கொண்டு அந்த நபர் கடையை விட்டு வெளியேறியதாகத் தெரிகிறது.
சிறிது நேரத்திற்குப் பிறகு செல்போனைக் காணவில்லை என்பதை உணர்ந்த ஊழியர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, ஸ்நாக்ஸ் வாங்க வந்த நபர் செல்போனை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பரபரப்பாக இயங்கும் கடைகளில் பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் தங்களது உடைமைகள் மீது கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.





