கோவை: ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளைத் தலைவர் ரவி சாம் வழிகாட்டுதலின்படி, கோவையில் முதல் முறையாக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள Anchor Sports World வளாகத்தில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி கால்பந்து வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். வீரர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தவும், அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் இந்த மாநில அளவிலான போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் பார்வை மாற்றுத்திறனாளி வீரர்களின் விளையாட்டுத் திறனை அங்கீகரிப்பதுடன், விளையாட்டுத் துறையில் அவர்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கோவையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பினால், அக்டோபர் 29ஆம் தேதி வியாழக்கிழமை காலை போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று நேரடியாகப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகளைப் பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






