கோவை: கோவை மாநகராட்சியில் 264 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 15,328 பேர் பயனடைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடந்த 8 நாட்களாக நடத்தப்பட்ட 264 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 15,328 பேர் பயனடைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, மழைக்கால நோய்களைத் தடுக்கும் வகையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களில் 11,021 பேருக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையானவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்த 49 பேருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.
கோவை மாநகராட்சியின் 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. மழைக்காலத்தில் பரவக்கூடிய வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களைத் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
மேலும், குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் நலன் கருதி இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்கள் மேலும் 5 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெரிவித்துள்ளார்.






