கோவை: கோவையில் தீபாவளியை பண்டிகையை யொட்டி, இரண்டு நாட்களில் பட்டாசு வெடித்ததில் காயமடைந்த 8 குழந்தைகள் உட்பட 23 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கோவையில் நேற்று தீபாவளிப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதனிடையே பட்டாசுகள் வெடித்ததில் காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 23 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, நவம்பர் 7ஆம் தேதி காலை 7 மணி முதல் 9ஆம் தேதி காலை 7 மணி வரை தீக்காயங்களுக்காக மொத்தம் 25 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதில் 23 பேருக்குப் பட்டாசு வெடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற 2 பேருக்குப் பிற சம்பவங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
பட்டாசு விபத்தில் காயமடைந்த 23 பேரில் 8 பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்.
12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 11 பேர் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனர்.






