கோவை: தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிய பயணிகள், போதிய பேருந்துகள் இல்லாததால் ஊட்டி மத்தியப் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தனர். வரிசையில் நின்றவர்களை ஏற்றாமல் வேறு சிலரைப் பேருந்தில் ஏற்றியதாகக் கூறி, இரண்டு சிறுமிகள் அரசுப் பேருந்தை மறித்து முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளி விடுமுறையையொட்டி கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். விடுமுறை முடிந்ததும் அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்துக்கு வந்ததால் கூட்டம் அதிகரித்தது.
பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனப் பயணிகள் தெரிவித்தனர். இதனால், கடும் குளிரிலும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக அவர்கள் கூறினர்.
இந்த நிலையில், வரிசையில் காத்திருந்தவர்களை ஏற்றாமல், வரிசையில் நிற்காத சிலரைப் பேருந்து ஊழியர்கள் ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பயணிகள், புறப்படத் தயாராக இருந்த அரசுப் பேருந்தைச் சுற்றி நின்று முறையிட்டனர்.
அப்போது, நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த இரண்டு சிறுமிகள் பேருந்தின் முன் நின்று அதை மறித்தனர். “நாங்கள் இவ்வளவு நேரம் வரிசையில் காத்திருக்கும்போது, அவர்கள் மட்டும் எப்படிப் பேருந்துக்குள் ஏறினார்கள்?” என்று பேருந்து ஊழியரிடமும் அங்கிருந்த காவலரிடமும் கேள்வி எழுப்பினர்.
சிறுமிகளுக்கு ஆதரவாகச் சக பயணிகளும் குரல் கொடுத்ததால், பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சிறுமிகள் பேருந்தை மறித்து கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






