கோவை: ஒரு நிமிடத்தில் 26 திருக்குறள்களை ஒப்புவித்து கோவை சிறுவன் அசத்தி உள்ளார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் நிலன் ஜீவித், ஒரு நிமிடத்தில் 26 திருக்குறள்களைத் தடையின்றிச் சொல்லி சாதனை படைத்துள்ளார்.
சிறுவனின் இந்த அபார நினைவாற்றலையும் திறமையையும் பாராட்டி, ‘International Book of Records’ (இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்) அமைப்பு இதனை உலகச் சாதனையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

நிலன் ஜீவித் இத்தகைய சாதனைகளைப் புரிவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக, ஒரு நிமிடத்தில் 24 திருக்குறள்களைச் சொல்லி ‘India Book of Records’ (இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்) அமைப்பின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்.
மேலும், இதே சாதனைக்காக ‘Asia Book of Records’ (ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்) அமைப்பு வழங்கும் மதிப்புமிக்க “கிராண்ட் மாஸ்டர்” (Grand Master) பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து வயதிலேயே உலகப் பொதுமறையான திருக்குறளில் அடுத்தடுத்து சாதனைகளைப் படைத்து வரும் சிறுவன் நிலன் ஜீவித்திற்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


