கோவை: கோவை உக்கடம் – சுங்கம் வாலாங்குளம் பூங்கா பகுதியில் பாம்பு ஒன்று தென்பட்ட நிலையில், அதனை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர், அங்கு வரும் காதலர்கள் மற்றும் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாநகரின் முக்கியப் பொழுதுபோக்குத் தலங்களில் ஒன்றாக உக்கடம் – சுங்கம் வாலாங்குளம் பூங்கா விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், நடைப்பயிற்சி மேற்கொள்வோர், இளைஞர்கள் மற்றும் காதலர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, மாலை நேரங்களில் குளக்கரையில் அமர்ந்து பொழுதைக் கழிப்பதற்காகப் பலரும் இந்தப் பகுதிக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், வாலாங்குளம் பூங்கா பகுதியில் பாம்பு ஒன்று நடமாடியதை அங்கிருந்த நபர் ஒருவர் கண்டுள்ளார். உடனடியாகத் தனது செல்போனில் பாம்பை வீடியோ எடுத்த அவர், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் காதலர்களை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.
அந்த வீடியோவில், “மக்களே… சுங்கம் லேக் பகுதிக்கு வந்தோம். இங்க வர்ற லவ்வர்ஸ் எல்லாம் கொஞ்சம் பார்த்துப் பாதுகாப்பா உட்காருங்க. நீங்க உட்காருவதெல்லாம் தப்பு இல்ல; ஆனா அங்கங்க பார்த்து உட்காருங்க… பாம்பு இருக்கு!” எனக் கூறியபடி, அங்கிருந்த பாம்பையும் காண்பித்துள்ளார்.
காதலர்களை நகைச்சுவையான முறையில் எச்சரிக்கும் வகையில் அவர் பேசிய இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
video
வாலாங்குளம் பூங்கா அமைந்துள்ள பகுதி குளக்கரை மற்றும் புதர்கள் நிறைந்த இடமாக இருப்பதால், மழைக்காலங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் நேரங்களிலும் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், குழந்தைகள், நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மற்றும் இளைஞர்கள் குளக்கரையோரம் உள்ள புதர்கள், பாறை இடுக்குகள் உள்ளிட்ட பகுதிகளில் அமரும்போது கவனமாக இருக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் வாலாங்குளம் பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வளர்ந்துள்ள தேவையற்ற புதர்களை அகற்றுவதுடன், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்களின் நடமாட்டம் குறித்து உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுமக்கள் அச்சமின்றிப் பூங்காவுக்கு வந்து செல்லும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


