கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண்மையில் கார்பன் பண்ணையம் மற்றும் கார்பன் வர்த்தகம் குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது.
தமிழக அரசின் நிதியுதவியுடன், பல்கலைக்கழகத்தின் இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை சார்பில் இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் பொன்விழா அரங்கில் தொடக்க விழாவில், வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 200 பேர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் மண் கார்பன் சேமிப்பு, நிலையான வேளாண் நடைமுறைகள், பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல் மற்றும் வளர்ந்து வரும் கார்பன் சந்தைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய வேளாண்மையை ஊக்குவித்தல், மண் வளத்தை மேம்படுத்துதல் மற்றும் கார்பன் வர்த்தகம் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை கருத்தரங்கின் முக்கிய நோக்கங்களாகும்.
நிகழ்ச்சியில் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறைத் தலைவர் முனைவர் ஆர்.கே. காளீஸ்வரி வரவேற்றார். இயற்கை வள மேலாண்மை இயக்குநர் முனைவர் எஸ். கார்த்திகேயன் பேசுகையில், நிலையான வேளாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கார்பன் பண்ணையம், கார்பன் வர்த்தகம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், மண் கார்பன் சேமிப்பு, பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல் மற்றும் நிலையான வேளாண் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் மண் மற்றும் நீர் மேலாண்மை உதவி தலைமை இயக்குநர் முனைவர் ஏ. வேல்முருகன் சிறப்புரையாற்றினார். அறிவியல் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளை விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நடைமுறை வேளாண் முறைகளாக மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குதல் மற்றும் கார்பன் சந்தைகளில் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரித்தல் ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இக்கருத்தரங்கின் மூலம் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நிலையான வேளாண் நடைமுறைகளை ஊக்குவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


