காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசுகள், நிறுவனங்கள், பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அந்த நடவடிக்கைகளுக்கு COP31 மாநாடு ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும் என்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தினார்.
துருக்கியின் அன்டால்யா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் COP31 காலநிலை மாற்ற மாநாட்டின் ஒரு பகுதியாக, நிலையான வளர்ச்சிக் கவுன்சில் சார்பில் ‘சர்வதேச காலநிலை செயல் மன்றம் 2030’ நிகழ்வு நவம்பர் 19, 2026 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜோஸ் சார்லஸ் மார்டின், ‘உறுதிமொழிகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருதல்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
“நீரின்றி அமையாது உலகு” என்ற திருக்குறள் வரியை மேற்கோள் காட்டிய அவர், மனிதர்கள் இந்தப் பூமியைப் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பிற உயிரினங்களுடனும் காடுகளுடனும் பகிர்ந்து வாழ்வதை நினைவூட்டினார். அரசுகள், நிறுவனங்கள், பொதுமக்கள் இணைந்து களத்தில் ஏற்படுத்திய மாற்றங்களுக்காக COP31 மாநாடு நினைவுகூரப்பட வேண்டும் என்றார்.
எல் நினோ போன்ற இயற்கை நிகழ்வுகளால் ஏற்படும் வறட்சி, கனமழையை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று அவர் கூறினார். ஐரோப்பிய ஆணையத்தின் 2026ஆம் ஆண்டுக் கணக்கை மேற்கோள் காட்டிய அவர், 1990 முதல் 2025 வரை அமேசான் மழைக்காடுகளில் 17 சதவீதம், அதாவது சுமார் 9,76,251 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அழிந்துள்ளதாகத் தெரிவித்தார். இது ஜெர்மனியின் பரப்பளவைவிட 2.7 மடங்கு என்றும், இந்தக் காடழிப்பின் பாதிப்பு உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றும் எச்சரித்தார்.
2030-க்குள் 500 ஜிகாவாட் தூய்மையான மின் உற்பத்தித் திறனை எட்டும் இலக்கை இந்தியா கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2026 அக்டோபர் 31 நிலவரப்படி, நாட்டின் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறன் 303.46 ஜிகாவாட்டாகவும், அணுசக்தியையும் சேர்த்தால் 312.24 ஜிகாவாட்டாகவும் இருந்ததாகத் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 500 டெராவாட் மணியைக் கடந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
‘பிரதம மந்திரி சூர்ய கர்’ திட்டத்தின் கீழ் 2026 நவம்பர் 2 நிலவரப்படி 65.26 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாகக் கூறிய அவர், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமிக்கவும், மக்களுக்குத் தடையின்றி விநியோகிக்கவும் தேவையான கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
விவசாயக் கழிவுகளை இயற்கை உரமாகவும் எரிபொருளாகவும் மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைச் சாலை அமைக்கவும் பள்ளி இருக்கைகள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம் என்ற அவர், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தியைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கார்பன் சான்றிதழ் திட்டங்கள் மாசைக் குறைக்க உதவ வேண்டும் என்றும், அவற்றின் பெயரில் மாசுபடுத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கூறினார்.
2035-க்குள் வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர் காலநிலை நிதி வழங்கும் உறுதிமொழியைச் செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். காலநிலை நிதியை 1.3 டிரில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கையும் அவர் குறிப்பிட்டார்.
கல்லணை, ஏரி–குள இணைப்பு, குடிமராமத்து போன்ற முறைகள் மூலம் தமிழர்கள் நீர்வளத்தைப் பாதுகாத்ததை நினைவுகூர்ந்த அவர், மழைநீர் சேகரிப்பிலும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதிலும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டின் 1,076 கிலோமீட்டர் நீளக் கடற்கரையில் 608 மீனவக் கிராமங்களும் சுமார் 10.48 லட்சம் மீனவ மக்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். புதுச்சேரியில் 38 மீனவக் கிராமங்களில் 1,14,014 மீனவ மக்கள் வாழ்வதாகத் தெரிவித்தார்.
1990 முதல் 2018 வரையிலான ஆய்வின்படி, தமிழ்நாட்டின் கடற்கரையில் 42.7 சதவீதமும், புதுச்சேரியின் கடற்கரையில் 56.2 சதவீதமும் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். புயல், வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பே அலையாத்திக் காடுகளைப் பாதுகாத்து, அறிவியல் அடிப்படையில் நிரந்தரக் கடலோரப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை அமைக்க வேண்டும் என்றார்.
அடுத்த தலைமுறைக்காகப் பூமியைப் பாதுகாத்து ஒப்படைக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதாகத் தெரிவித்த ஜோஸ் சார்லஸ் மார்டின், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒவ்வொரு குடிமகனும் உடனடியாகச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி–பதில் அமர்வில், புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோருடன் இணைந்து, அனைத்து அரசுக் கட்டடங்களிலும் சோலார் பேனல்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக, அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் சோலார் பேனல்களை அமைப்பது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் இணைந்து ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.


