கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே. மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளி திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கரும்புக்கடை, பாத்திமா நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் அபுதாஹிர் (48). இவர் டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே. மார்க்கெட்டில் கடந்த 6 ஆண்டுகளாக சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக அபுதாஹிரும், அவரது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் தாயுடன் வசித்து வருகின்றனர். விவாகரத்துக்குப் பிறகு அபுதாஹிர் டி.கே. மார்க்கெட் பகுதியிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மதுப்பழக்கம் கொண்ட அபுதாஹிருக்கு உடல்நலப் பாதிப்பும் இருந்துள்ளது. கடந்த 20 நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு டி.கே. மார்க்கெட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் அபுதாஹிரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து பெரிய கடைவீதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அபுதாஹிரின் உடலைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்பதும், உடல்நலப் பாதிப்பு காரணமாக ரத்த வாந்தி எடுத்திருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அபுதாஹிரின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பெரிய கடைவீதி போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


