கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 4 மற்றும் 5 வயதுடைய பள்ளிச் சிறுமிகள் இருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, பன்றி இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்த தவசி (18) என்பவரை சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
சூலூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி எல்கேஜியும், 5 வயது சிறுமி ஒன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரும் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, வீட்டுக்கு அருகிலுள்ள பன்றி இறைச்சிக் கடையில் பணிபுரிந்த இளைஞர், அவர்களைக் கடையின் பின்புற அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து தப்பி வீட்டுக்குச் சென்ற சிறுமிகள் இருவரும், நடந்ததைத் தாயிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறுமிகளின் பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரமாதேவி வழக்குப் பதிவு செய்து, அந்தக் கடையில் பணிபுரிந்த தவசியைப் பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை தவசி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, போக்சோ சட்டப் பிரிவுகள் உள்பட 6 பிரிவுகளின் கீழ் தவசி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


