கோவை: ஒளவையார் விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஔவையார் விருது சமூக சீர்திருத்தம் மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு. கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது பெறுபவருக்கு ரூபாய் ஒரு இலட்சத்திற்கான (ரூ.1,00,000) காசோலை பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே 2027ம் ஆண்டு வழங்கப்பட உள்ள ஒளவையார் விருதுக்கு தகுதியுள்ள மகளிர் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் அறிவிப்பு விடுத்துள்ளார்.
ஒளவையார் விருது வழங்கப்படும் பெண்களுக்கான தகுதிகள், தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் புரிந்திருக்க வேண்டும்
சமூக சீர்திருத்தம் மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்து விளங்க வேண்டும். பெண்களுக்கான இச்சமூக சேவைகள் தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதிற்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
2026-2027 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது.
எனவே 18.01.2027-இற்குள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளம் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


