கோவை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீண்டும் மக்களை ஏமாற்றியுள்ளது தவெக அரசு என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மக்களை ஏமாற்றிவிட்டதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநில நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.வீட்டுக் கூரை சூரிய சக்தி மின் திட்டம், வீட்டு வசதித் திட்டம், தொழில்முனைவோர் திட்டம் போன்ற மத்திய பாஜக அரசின் பல்வேறு திட்டங்களைப் பெயர் மாற்றி அறிவித்துள்ளனர்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500, குடும்பத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளின் குழந்தைகளுக்கு இலவச உயர் கல்வி, பால் கொள்முதல் விலை உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்துதான் தவெக ஆட்சியைப் பிடித்தது.
ஆனால், இந்த முக்கியமான வாக்குறுதிகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை.தேர்தலில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தவெக, நிதிநிலை அறிக்கையிலும் மக்களை ஏமாற்றியுள்ளது.
தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான புதிய திட்டங்கள், புதிய சிந்தனைகள், புதிய தொலைநோக்குத் திட்டங்கள் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.





