முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் திருப்தியளித்ததா? கோவை தொழில்துறையினர் சொல்வது இதுதான்!

கோவை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதல்முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில், தொழில்துறையினருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தொழில்துறையினரை திருப்தியடையச் செய்ததா? என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.

முதல் தேர்வில் பாஸ்

சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. மே மாதம் 10ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தாலும், அரசுத்துறைகளில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு குரல்வளையை நடுங்க வைத்துள்ளார் விஜய்.

Advertisement

குறிப்பாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், தான் வாங்கிய ரூ.5 ஆயிரம் லஞ்சப் பணத்தை திருப்பி வாங்கிச் செல்லுமாறு கெஞ்சிய ஆடியோ கூட வைரலானது. அந்த அளவுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், இந்த அரசின் நடவடிக்கைகளை கண்டு அஞ்சுகின்றனர். இதன்மூலம், முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, மக்கள் மன்றத்தில் முழு மதிப்பெண்களை பெற்று விட்டது என்றே சொல்லலாம்.

அக்னி பரீட்சை

Advertisement

தற்போது, தவெக அரசின் 2வது அக்னி பரீட்சை இன்று தமிழக சட்டசபையில் நடைபெற்றது. இதில், விஜய்யின் அரசு பாஸ் மார்க் வாங்கியதா? இல்லையா? என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

தமிழகத்தின் ஒட்டு மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக இருக்கும் நிலையிலும், பெண்கள், மாணவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களை குறிவைத்து பல்வேறு புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. அதில், முக்கியமானவற்றை கீழே காணலாம்.

  • முதல்வர் விஜய்யின் முதன்மை தேர்தல் வாக்குறுதியான அண்ணன் சீர் திட்டத்தின் கீழ், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமண உதவியாக ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம்; அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும். அண்ணா பிறந்த நாளான செப்.,15ம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மண்ணின் மகள் திட்டம்; பெண்கள் சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிதியுதவி வழங்கப்படுவதோடு, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து பெண்களுக்கு 100 சதவீதம் முழு விலக்கு. இந்தத் திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு முன்பே தங்கி, மருத்துவக் கண்காணிப்பு மற்றும் ஊட்டச்சத்து பெற ரூ.23 கோடி செலவில் ஆதரவு மையங்கள் உருவக்கப்படும.
  • ரூ.33 கோடி செலவில் முதியோருக்கான 1000 நடமாடும் மருத்துவ சிகிச்சை மையங்கள் அறிமுகப்படுத்தப்படும்
  • கல்வித்துறைக்கு ரூ.44,567 கோடி ஒதுக்கீடு
  • நிலம் முழுவதும் முதற்கட்டமாக 10 ஆயிரம் அரசுப் பள்ளிகளின் உள்ளட்டமைப்பு குறிப்பாக கழிப்பறை வசதிகளை மேம்படுத்த, ‘சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டத்தின் கீழ் ரூ.139 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை 6 முல் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய ரூ.710 கோடி ஒதுக்கீடு
  • கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு
  • இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி அளிக்கப்படும்.

இருமடங்கு

விளையாட்டுத் துறைக்கு இந்த முறை இருமடங்கு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.572 கோடியாக இருந்த நிதி, ரூ.1,051 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 10 சிறப்பு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தொழில்துறை

சரி, தவெக அரசின் பட்ஜெட்டில் தொழில்துறைக்கு என்னென்ன திட்டங்கள் மற்றும் எவ்வளவு நிதி என்பதை தற்போது காணலாம்.

  • 2036ம் ஆண்டுக்குள் உள்நாட்டு உற்பத்தியை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்துவதே அரசின் இலக்கு
  • தொழில் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் விதமாக, பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள், உலர் துறைமுகங்கள் மிக முக்கியமான இடங்களிலும், பெட்ரோ ரசாயனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
  • புதிய துறைமுகங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்.
  • புதிய தமிழக தொழில் கொள்கை வெளியிடப்படும்.
  • தொழில் துவங்க எளிதில் அனுமதி பெறும் வகையில், ஒற்றைச்சாளர இணையதளம் 3.0 அறிமுகப்படுத்தப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3,200 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்.
  • தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்படும்.
  • இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமாக ‘அறிவகம்’ உருவாக்கப்படும்.
  • தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக்கு ரூ.4,414 கோடி ஒதுக்கீடு
  • மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.225 கோடியும், மூலதன மானியங்கள் திட்டத்தின் கீழ் ரூ.352 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.300 கோடி செலவில் பசுமை எஃகு உற்பத்தி முன்முயற்சி திட்டம் மேற்கொள்ளப்படும்.
  • சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.2,142 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஜவுளி, ஆடை மற்றும் கைவினைத்துறைகளை மேம்படுத்த, ரூ.60 கோடி செலவில் தமிழக வடிவமைப்பு நிறுவனம் அமைக்கப்படும்.
  • ரூ.16 கோடியில் தமிழக பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்.
  • திருப்பூரில் ரூ.10 கோடி செலவில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல, மெச்சத்தக்க வகையில் பல்வேறு அம்சங்கள் இந்தப் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தாலும், எதிர்க்கட்சிகள் இதனை ஜீரோ பட்ஜெட் என்றே விமர்சித்து வருகின்றனர். அதேபோல, தமிழக அரசின் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்ததா? என்று கேட்டால், அதுதான் இல்லை.

ஏமாற்றம்

தமிழக அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக கோவையைச் சேர்ந்த தொழில்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. ரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தினர் கூறியதாவது; தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட் முழுக்க முழுக்க ஏமாற்றத்தை அளித்துள்ளது. மின்கட்டணத்தில் நிலை கட்டணத்தை பாதியாகக் குறைக்குமாறு முதல்வரிடம் மனு அளித்திருந்த நிலையில், அது பற்றி எந்த அறிவிப்பும் வெளிவராதது வருத்தமளிக்கிறது. இந்த நிலை கட்டணம் நீடித்தால், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, தொழிற்சாலைகளையே மூடும் நிலைக்குக்கு தள்ளப்படும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில்பேட்டைகளிலும் குறு, சிறு தொழில்களுக்கு சலுகை விலையில் திட்டங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல, சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் இருந்தும் கருத்துக்களைக் கேட்டறிந்து, தமிழகத்தின் புதிய தொழில் கொள்கையை உருவாக்க வேண்டும். சிறு தொழில்முனைவோருக்கான வட்டி மானியத்தை 6 சதவீதமாக குறைக்க வேண்டும், எனக் கூறினர்.

நீண்ட நாள் கோரிக்கை

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் கூறியதாவது; *சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.2,142 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இருப்பினும், தொழில்துறையினருக்கு பெரும் சுமையாக இருக்கும் நிலை கட்டணத்தை குறைப்பது பற்றியோ, ரத்து செய்வது பற்றியோ அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. குறுந்தொழில்பேட்டை மையம், தொழிற்பூங்கா மற்றும் மூலப்பொருட்கள் வங்கி அமைப்பது போன்றவை கோவையின் நீண்ட நாள் கோரிக்கைகளாகும். அதுபற்றி எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இது கோவை தொழில்துறையினருக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது, என்றனர்.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...