கோவை: முதல்வரின் முகவரி மனுக்களை
தீர்வு காண்பது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில், முதல்வரின் முகவரியின் கீழ் மனுக்களை தீர்வு காண்பது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேந்திரன், முதல்வரின் முகவரி துறை (சென்னை) மேற்பார்வை பொதுமக்கள் குறைத்தீர்ப்பு அலுவலர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையாளர் குமரேசன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் “முதல்வரின் முகவரி” மூலம் பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் ஏற்று, காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனுவின் கோரிக்கையையும் முழுமையாக ஆய்வு செய்து, தொடர்புடைய அலுவலர்களின் மூலம் உண்மை நிலையை உறுதி செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் மனுதாரரின் கோரிக்கைக்கு அரசின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி உரிய தீர்வு வழங்க வேண்டும். மனுதாரர் வழங்கும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட்டு, உரிய விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மனுதாரருக்கு வழங்கப்படும் பதில்கள் தெளிவாகவும்முழுமையானதாகவும் இருக்க வேண்டும். மேலும், மனுக்களை தொடர்ந்து கண்காணித்து, காலதாமதம் ஏற்படாமல் விரைந்து முடிக்க வேண்டும். முதல்வரின் முகவரி” திட்டத்தின் நோக்கமான விரைவான வெளிப்படையான மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட குறைதீர்ப்பு சேவையை உறுதி செய்யும் வகையில் அனைத்து அலுவலர்களும் செயல்பட வேண்டும்.
அனைத்து துறை அலுவலர்களும இப்பயிற்சியினை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு முதல்வரின் முகவரித்துறை மனுக்களுக்கு முறையாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.





