கோவை: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆவின் நிர்வாகம் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும், தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் நலச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தனியார் பால் நிறுவனங்கள் விலை அதிகரித்து உள்ள நிலையில் ஆவின் நிர்வாகமும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால் பணியாளர்களுக்கு சம்பளம் தர இயலாது எனவே பெரும்பாலான பால் கூட்டுறவு சங்கத்தினரும் அதில் பணிபுரியும் பணியாளர்களும் தனியார் பால் நிறுவனங்களுக்கு மாறும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தனியார் பால் நிறுவனங்கள் அதன் விலையை உயர்த்தினால் எதுவும் சொல்லாத பல்வேறு கட்சியினர் ஆவின் நிர்வாகம் விலையை உயர்த்தினால் மட்டும் கண்டனங்களை எழுப்புவதாக கூறினர்.
ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்வதற்கு சுமார் 60 ரூபாய் செலவு செய்கின்ற நிலையில் மானியம் மிகவும் குறைவாகவே ஆவின் நிர்வாகத்திடம் இருந்து கிடைத்து வருவதாகவும் அதுவும் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டடிருப்பதாக வேதனை தெரிவித்தனர்.
எனவே உடனடியாக இந்த துறை சார்ந்த அதிகாரிகள் பால்வளத் துறை அமைச்சர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.





