கோவை: அலிபாபாவும் 40 திருடர்களையும் போல கரூரிலிருந்து செந்தில் பாலாஜியும் 18 சுயேட்சை வேட்பாளர்களும் கோவைக்கு வந்துள்ளனர் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து வைசியாள் வீதி பகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். வைசியாள் வீதி முழுவதும் பாஜக மற்றும் அதிமுகவினர், வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், எஸ்.பி. வேலுமணி, அண்ணாமலை ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரின் பெயர்களையும் தெரிவித்து, இந்த தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை பாராட்டி, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மேலும், அண்ணாமலை காவல்துறையில் உயரதிகாரி பதவியை விட்டுவிட்டு மக்கள் பணி ஆற்றுவதற்காக பாஜகவில் இணைந்துள்ளார். நம்முடைய சொந்தமான அம்மன் அர்ஜுனன் வேண்டுமா அல்லது கரூரில் போட்டியிட முடியாமல் கோவைக்கு வந்துள்ள செந்தில் பாலாஜி வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பி, அனைவரும் அம்மன் அர்ஜுனனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
அண்ணாமலை பேசியதாவது:
மே 4ஆம் தேதி கோவை தெற்கு தொகுதியில் பெரிய அரசியல் சரித்திரத்தை உருவாக்க அம்மன் அர்ஜுனன் தயாராகி வருகிறார். அலிபாபாவும் 40 திருடர்களும் பற்றி நமக்குத் தெரியும்; அதுபோல கரூரிலிருந்து “பத்து ரூபாய் பாலாஜி” மற்றும் 18 திருடர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.
திமுகவில் சாராய அமைச்சராக இருந்து, கரூரிலிருந்து தோல்வி பயத்தால் கோவைக்கு வந்துள்ளார் என்றும், ஜனநாயகத்தை பணநாயகத்தால் விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணத்தில் இங்கு போட்டியிடுகிறார் என்றும் தெரிவித்தார். அலிபாபாவும் 40 திருடர்களும் போல அவருடன் 18 சுயேட்சை வேட்பாளர்களும் வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக கோவை நகரில் நடக்கக் கூடாத சம்பவங்களை பார்த்து வருகிறோம் என்றும், ராமநாதபுரம் காவல் நிலையத்தை திமுகவினர் முற்றுகையிட்டு காவல் நிலையத்தையே பூட்டு போட்டனர் என்றும் கூறினார்.
அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள்; ஆனால் அவர்களுக்கு தெரியாது—அவர்களுக்கு எதிராக நிற்பவர் ஒரு எளிய மனிதர், மக்களின் இதயத்தில் இருப்பவர். அதிமுக ஆட்சியில் பத்தாண்டு காலங்களில் பல்வேறு திட்டங்களை கோவைக்கு கொண்டு வந்தவர் அம்மன் அர்ஜுனன் என்று பாராட்டினார். கோவை தெற்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்றும், செந்தில் பாலாஜி ஒரு விஷக்கிருமி என்றும், அவர்களை உள்ளே விட்டால் கேன்சர் கட்டி போல பரவி விடுவார்கள் என்றும் விமர்சித்தார். எனவே, அந்த கிருமிகளை இந்த தேர்தலில் நிராகரித்தால் தமிழகத்தில் ஜனநாயகம் புனிதமாகும் என்றும் கூறினார்.
கோவையில் எஸ்.பி. வேலுமணி மக்களின் பாதுகாவலனாக இருக்கிறார் என்றும், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, கஞ்சா புழக்கம் கட்டுப்பாடு, பெண் குழந்தைகள் நிம்மதி ஆகியவற்றிற்காகவும், அம்மன் அர்ஜுனன் சரித்திரம் படைக்கவும், இந்த தொகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி அளிக்க வேண்டும் என்றும் கூறி, அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து காந்தி பார்க் பகுதியில் தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணியை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். 2011 முதல் 2021 வரை கோவை வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது என்றும், மத்திய அரசின் நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; கொங்கு மண்டலத்தில் 21 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். மே 4ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது யாரும் நிம்மதியாக இல்லை; கரூரிலிருந்து கோவைக்கு சில “விஷ கிருமிகள்” ஊடுருவிய பிறகு தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அந்த நிலையை முறியடிக்கக்கூடிய மருந்து எஸ்.பி. வேலுமணி தான் என்றும் கூறினார்.
கோவைக்கு செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவை வளர்ச்சியில் தேங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். பிரச்சாரம் முடிந்த பிறகும் உறவினர்கள், நண்பர்கள், ஊரில் இருப்பவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரட்டை இலைக்கு வாக்களிக்க வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற உள்ளது; அது சாதாரண மாற்றம் அல்ல, பெரிய மாற்றமாக இருக்க வேண்டும். மே 4ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சரித்திர ஆட்சி மாற்றத்தை நாம் காணப்போகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.


