கோவை: கல்வி நிதியை குறைத்து கவர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மறுமலர்ச்சி மக்களை இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் கல்வி நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து மாமன் சீர் வழங்கப்படுவதாக கூறி கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தவெக அரசின் தமிழ்நாடு பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக கூறி அதனை கண்டிக்கும் வகையிலும் கூடுதல் நிதியை ஒதுக்கக் கோரியும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை குறைத்து மாமன் சீர் உள்ளிட்ட செலவுகளை செய்வதாக முழக்கங்களை எழுப்பினர்.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாபெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த 2016-17-ம் நிதியாண்டில் 17.7 சதவீதமாக இருந்த கல்வி நிதி ஒதுக்கீடு, நடப்பு பட்ஜெட்டில் 13 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர்.
கல்வித் துறைக்குச் சேர வேண்டிய ரூ.18,000 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த ஆட்சியில் ஒதுக்கியதை விட இந்த ஆட்சியில் 8 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
அடுத்த தலைமுறைக்கான முதலீடான கல்விக்கான நிதியைக் குறைத்துவிட்டு, தேர்தலில் அளிக்கப்பட்ட கவர்ச்சி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் ஊதாரித் திட்டங்களுக்கும் அந்தப் பணத்தை அரசு திருப்பிவிட்டுள்ளது என்றும் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் ரூ.10,000 கோடி உயர்த்த வேண்டும் தவறினால், தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.




