ஆனைமலை வனப்பகுதியில் அதிர்ச்சி… தந்தங்களுடன் யானையின் தலை, எலும்புகள் மீட்பு!

கோவை : கோவை வனக்கோட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானையின் எலும்புகள், தந்தங்களுடன் கூடிய தலை மற்றும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த யானை, ஒரு வருடத்திற்கும் மேலாக முன்பே இறந்திருக்கலாம் என உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த மாதம் முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வனப்பகுதிகளில் சுமார் 700 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வனவிலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், போலாம்பட்டி வனச்சரகம், பூண்டி மத்திய காவல் சுற்றுக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் கேமராக்களை கண்காணிக்க சென்றுள்ளனர். அப்போது முட்கள் நிறைந்த புதர் பகுதியில் உள்ள சிறிய ஓடை அருகே யானையின் எலும்புகள் கிடப்பதை பார்த்துள்ளனர்.

Advertisement

இதையடுத்து வனப்பணியாளர்கள் அந்த பகுதியை சுற்றி தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது ஓடையில் இருந்து சிறிது தொலைவில் தந்தங்களுடன் கூடிய யானையின் தலை கிடந்தது தெரியவந்தது. மேலும், அதற்கு சிறிது தொலைவில் யானையின் உடல் பாகங்களும் கிடந்துள்ளன.

அடர்ந்த புதர் பகுதிக்கு நடுவே செல்லும் ஓடை நீரில், ஏற்கனவே இறந்த யானையின் உடல் பாகங்கள் அடித்து வரப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில், உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே யானையின் உடல் பாகங்களை ஆய்வு செய்து உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில், இறந்த யானைக்கு சுமார் 20 வயது இருக்கலாம் என்றும், அது இறந்து ஒரு வருடத்திற்கும் மேலாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், யானையின் 2 தந்தங்களையும் வனத்துறையினர் கைப்பற்றி பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.

யானை எப்படி இறந்தது என்பது தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...