கோவை: தேசிய அளவில் பதக்கம் வென்ற கால்பந்து வீரர் வீராங்கனை பகுதி நேர பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (Khelo India) திட்ட நிதியுதவியில் துவக்கநிலை கால்பந்து பயிற்சிக்கான SDAT. விளையாடு இந்தியா மாவட்ட மையம் கோயம்புத்தூர் மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் செயல்பட்டுவருகிறது.
இம்மையத்தில் 50-100 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இம்மையத்தில் பயிற்சியாளர் நியமனம் செய்திட தேசிய அளவில் சாதனைபடைத்த 40 வயதிற்குட்பட்ட கால்பந்து வீரர் வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேனா போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர தொகுப்பு ஊதியம் ரூ.25000 வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.
இதற்கான விண்ணப்பத்தை கோயம்புத்தூர்மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் (காலை 10.00 மணி முதல் 5 மணிவரை) நேரில் பெற்றுக்கொள்ளலாம். 30.07.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு கோயம்புத்தூர்மாவட்டநேரு விளையாட்டரங்கத்தில் 04.08.2026 நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.





