கோவை: OTT மற்றும் சர்வதேச படங்களின் வரவால் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வை விரிவடைந்துள்ளதாக அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
கோவை பிராட்வே திரையரங்கில் நடைபெற்ற ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில், நடிகர் அசோக் செல்வன் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்வையிட்டார்.
திரையிடலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது சொந்த ஊர் ஈரோடு என்பதால் கோவை தனக்கு மிகவும் பிடித்த நகரம் என்றும், இங்குள்ள மக்களுக்கு இத்திரைப்படம் பிடிக்க வேண்டும் என்பது தனது முக்கிய ஆசையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக படக்குழுவினர் போட்ட உழைப்புக்கு பணத்தை விட திரையரங்கில் ரசிகர்கள் எழுப்பிய கைதட்டலும் விசிலும், சில உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் அவர்கள் சிந்திய கண்ணீருமே உண்மையான ஊதியம் என்று குறிப்பிட்டார்.
கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்த ஆபத்தான சண்டைக் காட்சியில் டூப் இன்றி தானே நடித்ததாகவும், அதற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.
காதல், ஆக்ஷன், த்ரில்லர் ஆகிய மூன்று ஜானர்களும் இயல்பாக இணையுமாறு அமைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்தன் சிறப்பான பாடல்களை வழங்கியுள்ளதாகப் பாராட்டிய அவர், OTT மற்றும் சர்வதேச படங்களின் வரவால் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வை விரிவடைந்துள்ளதாகக் கூறினார்.
இதனால் பெரிய நடிகர்கள் அல்லது பட்ஜெட்டைப் பார்க்காமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், தனி காமெடி டிராக் இல்லாமல் முழுநீள நகைச்சுவை திரைப்படம் உருவாக்குவது தற்போதைய சூழலில் சவாலாக இருந்தாலும், நல்ல கதை அமைந்தால் நிச்சயம் நகைச்சுவை படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தொடர்ந்து பல திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அசோக் செல்வன் கூறினார்.






