கோவை: பேருந்துக்குள் பெண் பயணி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கே பேருந்தை செலுத்தி உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் – நடத்துநருக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.
கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ஸ்ரீ கணேசா பேருந்தை ஓட்டுநர் லோகேஷ் இயக்கி வந்தார். பேருந்து கோவை பீளமேடு அருகே வந்தபோது, அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், நடத்துநர் பிரகாஷ் மற்றும் ஓட்டுநர் லோகேஷிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஓட்டுநர் லோகேஷ் சற்றும் தாமதிக்காமல் அருகில் இருந்த பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு பேருந்தை திருப்பிச் சென்று, நேரடியாக அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயில் வரை பேருந்தை செலுத்தினார்.
உடனடியாக மருத்துவப் பணியாளர்கள் அந்த பெண் பயணியை மீட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
சுமார் இரண்டு மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண் பயணி உடல்நலம் தேறியதாக கூறப்படுகிறது.
பயணி ஒருவர் மயங்கியதை அறிந்தவுடன், ஒரு நொடியும் தாமதிக்காமல் பேருந்தை மருத்துவமனைக்கே செலுத்தி அவரது உயிரைக் காப்பாற்ற உதவிய ஓட்டுநர் லோகேஷ் மற்றும் நடத்துநர் பிரகாஷுக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.





