கோவை: இருகூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து விலை உயர்ந்த பைக்கை திருடிச் சென்ற கொள்ளையர்கள் குறித்த CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருது விக்னேஷ். இவர் நீலாம்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் இருகூர் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். கல்லூரி செல்வதற்காக இவர் பயன்படுத்தி வந்த R15 பைக் செயின் அறுந்து பழுதான நிலையில் கடந்த 6 மாதங்களாக வீட்டின் காம்பவுண்டிற்குள் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே நேற்று காலை 7 மணிக்கு அங்கு ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்த வாலிபர்கள், காம்பவுண்ட் கேட்டைத் திறந்து உள்ளே புகுந்தனர்.
மேலும், பூட்டப்பட்டு இருந்த பைக்கின் லாக்கை உடைத்து, பழுதாகி நின்ற அந்தப் பெரிய வாகனத்தைச் சத்தமில்லாமல் உருட்டிச் சென்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் “இந்த கும்பல் முதல் நாளே நோட்டமிட்டு திருட்டை அரங்கேற்றியுள்ளனர். வீட்டில் ஆள் இல்லை என்று அறிந்தே இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ ஆதாரங்களைக் கொண்டு சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்க உள்ளோம்.” என்றனர்.

