கோவை: சென்னை விட கோவையில் வெப்பம் அதிகமாக இருக்கிறதே… ஏப்ரல் மாதமே இப்படி என்றால் மே மாதம் எப்படி இருக்கும் என்று நம் ஊர் மக்கள் அச்சப்படும் சூழலில் வானிலை ஆர்வலர் சுஜய் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கோடை வெப்பம் மெல்ல மெல்ல அதிகரித்து தற்போது 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் (98 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரை) வெப்பம் பதிவாகி வருகிறது.
பகல் நேரத்தில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்லவே சிரமப்பட்டு வருகின்றனர். சிலர், “ஏப்ரல் மாதமே வெயில் இந்தக் கொளுத்து கொளுத்துதே… மே மாதம் எப்படி இருக்குமோ? சென்னையை விட வெயில் ஜாஸ்தி ஆயிருச்சே” என்ற புலம்பலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே சென்னை-கோவை இடையே இருக்கும் காலநிலை வேறுபாடுகளையும், கோவையில் மே மாதம் வெப்ப நிலை எப்படி இருக்கும் என்றும் கோவையைச் சேர்ந்த வானிலை ஆர்வலர் சுஜய் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
கோவையில் இந்த வாரம் அதிகபட்ச வெப்பநிலை 39.2°C ஆக பதிவாகியுள்ளது. இது மே 3, 2025க்குப் பிறகு பதிவான மிக அதிகமான வெப்பநிலையாகும்.
அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலை சுமார் 39°C (±0.5°C) அளவில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சில இடங்களில் வெப்பத்தால் உருவாகும் லேசான மழை (convective showers) பெய்ய வாய்ப்பு இருந்தாலும், பெரிய அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.
சென்னையை விட அதிகம்
ஏப்ரல் மாதத்தில் கோவையில் கிழக்கு திசையில் காற்று வீசுகிறது. இது தமிழ்நாட்டின் சமவெளிகளை கடந்து வருகிறது. இதனால் சூடான காற்று கோவையை நோக்கி வருகிறது. அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் சென்னையில் நேரடி கடற்காற்று வீசுவதால் வெப்பம் குறைவாக இருக்கிறது.
மே மாதத்தில் பருவமாற்றத்தால் மேற்கு திசை காற்று பாலக்காடு கணவாய் வழியாக கோவையில் வீசத் தொடங்கும். இதனால் கோவையின் வெப்பம் குறையும்; அதே நேரத்தில் இந்த காற்று கிழக்கு சமவெளிகளில் வெப்பத்தை அதிகரிக்கும். எனவே மே மாதத்தில் சென்னை போன்ற கடலோரப் பகுதிகளை அதிகமாக சூடாக்கும்.
ஜூன் மாதம் எப்படி?
தென்மேற்கு பருவமழை தொடங்குவதால், ஜூன் மாதம் கோவையில் குளிர்ச்சியான நிலை ஏற்படத் தொடங்கும். ஆனால், பாலக்காடு கணவாய் இருவேறு விளைவுகளை தருகிறது. பருவமழைக்காலத்தில் கோவையை குளிர்விக்கும். அதே நேரத்தில் வீசும் பலத்த காற்று மழையை குறைக்கவும் வாய்ப்புள்ளது.
இதன் விளைவாக ஆண்டு சராசரி மழை அளவு கோவை சமவெளிப் பகுதிகளில் சுமார் 60 செ.மீ என்றும், பாலக்காடு சுற்றுவட்டாரங்களில் சுமார் 200 செ.மீ என்றும் பதிவாகிறது.
பொதுவாகவே கோவையின் நகரப்பகுதிகள் மற்ற பகுதிகளைக் காட்டிலும் மழை குறைந்த பகுதியாகவே உள்ளன. இதனால் தான் இங்கு மழைநீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை மிகவும் முக்கியம் என்று கூறுகிறோம்.
இவ்வாறு சுஜய் கூறினார்.
வானிலை ஆர்வலர் சுஜய் கூறியபடி, ஏப்ரல் மாதத்தில் கோவையில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. பொதுவாகவே நமது மாவட்டத்தில் மே மாதத்தின் தொடக்கத்திலிருந்து வெப்பம் குறையும். எனவே மே மாதம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் வேண்டாம். இன்னும் கொஞ்ச நாளில் நம்ம ஊர் குளுகுளு கோவை ஆகப்போகிறது.
வெயிலை நினைத்து வேதனைப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த செய்தியைப் பகிர்ந்து அவர்களையும் ‘கூல்’ ஆக்கிடுங்கள்.


